IPL 2018:கடந்த போட்டியில் சென்னையவே பஞ்சறாக்கிய பஞ்சாப் அணி!பேட்டிங் கில்லியான சன்ரைசர்ஸ்வுடன் பஞ்சாப் இன்று மோதல் !
சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய உள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக பந்து வீச்சாளர்களின் உயர்மட்ட செயல் திறனால் அந்த அணி வெற்றிப் பாதையில் சவாரி செய்து வருகிறது. அதேவேளையில் அஸ்வின் தலைமையில் புதிய வடிவம் பெற்றுள்ள பஞ்சாப் அணி எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்யும் தாக்குதல் பேட்டிங்கை கொண்டதாக அமைந்துள்ளது. அந்த அணி 3 ஆட்டங்களில் இரு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.
ஹைதராபாத் அணி இந்த சீசனிலும் பந்து வீச்சில் அதீத பலம் கொண்டுள்ளது. புவனேஷ்வர் குமார், ரஷித் கான், பில்லி ஸ்டேன்லேக், சித்தார்த் கவுல், ஷகிப் அல் ஹசன், சந்தீப் சர்மா ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றுவதுடன் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அதேவேளையில் பேட்டிங் வரிசை அனுபவம் கொண்டதாக அமைந்துள்ளது. விருத்திமான் சாஹா, வில்லியம்சன், ஷிகர் தவண், மணீஷ் பாண்டே ஆகிய ோர் டாப் ஆர்டரிலும் ஷகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான் ஆகியோர் நடுகள வரிசையிலும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
எனினும் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை இந்த சீசனில் பெரிய அளவிலான இலக்குக்கு எதிராக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. 3 ஆட்டங்களிலும் அந்த அணி குறைந்த அளவிலான இலக்கை துரத்தி வெற்றி கண்டது. அதிகபட்சமாக மும்பை அணிக்கு எதிராக 148 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில்தான் வெற்றியை எதிரணியிடம் இருந்து தட்டிப்பறித்தது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை 125 ரன்களுக்குள் மட்டுப்பத்தியது ஹைதராபாத் அணி.
எளிதான இந்த இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஷிகர் தவண் (78), வில்லியம்சன் (36) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர்கள் வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். முன்னணி வீரரான புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்கள் வீழ்த்த கொல்கத்தா அணியால் 138 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
மறுபுறம் பஞ்சாப் அணி, வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்த போதிலும் ஆட்டம் மிக நெருக்கமாகவே சென்று முடிவடைந்தது. இந்த சீசனில் முதன் முறையாக களம் கண்ட கிறிஸ் கெய்ல் 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். இதன் மூலம் எதிரணிக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் இன்னும் தன்னிடம் இருப்பதாக கெயில் உணரச் செய்தார்.
மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலுடன் இணைந்து கெயில் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார். இந்த சீசனில் கே.எல்.ராகுல் 3 ஆட்டங்களிலுமே சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 16 பந்துகளில் 51 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக 30 பந்துகளில் 47 ரன்களும் விளாசி மிரட்டியிருந்தார். அதேவேளையில் சென்னை அணிக்கு எதிராக 22 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். இவர்களுடன் மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
அஸ்வினும் பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடி வருகிறார். சீனியர் வீரரான யுவராஜ் சிங்கின் பார்ம் மட்டுமே கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. 3 ஆட்டங்களிலும் அவர் ஒட்டுமொத்தமாக 36 (12, 4, 20) ரன்களே சேர்த்தார். முதன்முறையாக அணியை வழிநடத்தும் அஸ்வின் சக அணி வீரர்களின் திறமையை சரியான விதத்தில் வெளிக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுபவராக உள்ளார். முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய நிலையில் அடுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் அதன் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த போதிலும் சென்னை அணிக்கு எதிராக மீண்டு வந்திருந்தது பஞ்சாப்.
சென்னை அணிக்கு எதிராக அஸ்வின் கேப்டனாக சமயோஜிதமாக செயல்பட்டார் என்றே கருதப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக பந்துவீசும் 17 வயதான சுழற்பந்து வீச்சாளாரான முஜீப் உர் ரஹ்மானிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். அவருடன் அஸ்வின், மோகித் சர்மா, அக்சர் படேல், ஆன்ட்ரூ டை ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.