வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு.. முகவர்களுக்கு கொரோனா பரிசோதனையா? – தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குத்தான் தொடங்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று தேவையா என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று தேவையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குத்தான் தொடங்கும். காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என கூறியுள்ளார். காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என் கூறியிருந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.