தனியார் தடுப்பூசி மையங்கள், தடுப்பூசியை நேரடியாக வாங்கலாம் – மே 1 முதல் அமல்!!
தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தனியார் தடுப்பூசி மையங்கள், கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக வாங்கலாம் என அறிவிப்பு.
கொரோனாவை ஒழிக்க உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி உள்ளது. அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என தகுதி வாய்ந்த மக்களுக்கு முன்னரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் தடுப்பூசி மையங்களில் ஒரு டோஸ் ரூ.250 என்ற விலைக்கு போடப்படுகிறது. இதனிடையே, தனியாருக்கு ரூ.600, மாநில அரசுக்கு ரூ.400 என கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் திருத்தப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின்படி, தகுதி வாய்ந்த முன்னுரிமை பிரிவினருக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
18 வயது நிரம்பியவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில், தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 50% மத்திய அரசுக்கும், மீதியை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கும். எனவே, தனியார் மையங்கள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். இது மே 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.