ஆக்சிஜனுக்காக தொழிற்சாலைகள் காத்திருக்கலாம், மனிதர்களால் முடியாது – டெல்லி உயர் நீதிமன்றம்!
தொழிற்சாலைகள் ஆக்சிஜனுக்காக காத்து இருக்கலாம். ஆனால், கொரோனா நோயாளிகளால் முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. நாளுக்கு நாள் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளின்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் சில மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை குறைப்பதற்கு கட்டாயப்படுத்தப் படுவதாக புகார் எழுந்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது, தொழிற்சாலைகள் ஆக்சிஜனுக்காக காத்து இருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகள் காத்து முடியாது எனவும், மனித உயிர்கள் தற்பொழுது ஆபத்தில் உள்ளதாகவும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உபயோகத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.