கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்தியா!
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் பிரிட்டனில் இந்தியா சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது இந்தியாவில் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், பல நாடுகளுக்குள் இந்திய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய வருகை ரத்து செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் தனது பயணத்தை ரத்து செய்ததுடன் இந்தியாவை தனது நாட்டில் சிவப்பு பட்டியலிலும் இணைத்துள்ளார்.
இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு செல்வதற்கான அனுமதி தற்போது மறுக்கப்படுட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இங்கிலாந்தில் வீடு இருந்தால் அவர்கள் அதிகப்படியான பணம் செலுத்தி அரசு அனுமதி பெற்ற ஒரு ஹோட்டலில் 10 நாட்கள் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன் பின்பு தான் இங்கிலாந்து செல்ல முடியும். இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள், இந்தியாவை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது கடினமான ஒன்றாக இருந்தாலும், கொரோனா தொற்று காரணமாக இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.