சத்தீஸ்கரில் மயானம் வரை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்படும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். ஒரு நாளுக்கு நூற்றுக்கும் அதிகமானோர் அம்மாநிலத்தில் உயிரிழந்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்வதற்கான வசதிகள் கூட அங்கு குறைவாக உள்ளது.

எனவே, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குப்பை வண்டியில் வைத்து மயானம் வரை கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களில் பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்த மாநகராட்சி ஊழியர்கள், உயிரிழந்த நோயாளிகளை குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்து செல்லும் காட்சிகள் உள்ளது. இந்த புகைப்படங்கள் குறித்து தலைமை சுகாதார அதிகாரி, நகர பஞ்சாயத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal