அதிர்ச்சி : அரசு மருத்துவமனையில் திருடு போன கொரோனா தடுப்பூசிகள்…!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக, பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில், இந்த தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ள சந்தையில் விற்பதற்காகவும், இந்த தடுப்பூசிகள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.