நாமக்கலில் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு…!முட்டை விலை உயர்வு…!
கடுமையான வெப்பம் எதிரொலி காரணமாக நாமக்கலில் கடந்த 2 வாரங்களில் சுமார் 15 லட்சம் பண்ணைக் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோடை வெயிலானது ஆரம்பமாகியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில்,ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்தே 105 டிகிரிக்கும் மேல் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.வெப்பத்தினை தாக்குப் பிடிக்க முடியாமல் நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையில் உள்ள கோழிகள் அதிகளவில் இறந்து வருகின்றன.
இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்,கடந்த 2 வாரங்களில் மட்டும் 15 லட்சம் கோழிகள் இறந்துள்ளன.இத்தகைய காரணத்தினால்,பண்ணைகளில் 1 கோடி அளவிலான முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேலும்,கோழித் தீவனமான சோயா புண்ணாக்கு ஒரு கிலோ 35 ரூபாயில் இருந்து 65 ரூபாயாக அதிகரித்து விட்டது.இதனால் பண்ணைகளில் புதிய குஞ்சுகளை விடுவதும் குறைந்து வருகிறது.எனவே முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.மேலும்,மத்திய அரசானது சோயா புண்ணாக்கை இறக்குமதி செய்தால் மட்டுமே கோழிப்பண்ணை தொழிலை நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”,என்று கூறினர்.
ஆகையினால்,நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.45 காசுகளாக இருந்து தற்போது 15 காசுகள் அதிகரித்து ரூ.4.60 காசுகளாக உயர்ந்துள்ளது.முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.