அதிர்ச்சி: “மெத்தைகளில் பஞ்சிக்கு பதில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம்” தீயிட்டு கொளுத்திய போலீசார்!
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தி மெத்தை தயாரிக்கப்பட்ட நிலையில், போலீசார் அதனை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசங்கள் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பயன்படுத்தி மெத்தை தயாரிப்பதாக மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டுக் கழக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இந்த நிறுவனம், மும்பையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குசம்பா கிராமத்தில் இயங்கி வருவதாகவும், இதில் பஞ்சிக்கு பதில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து மெத்தை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கொத்து, கொத்தாக பயன்படுத்த முகக்கவசங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அங்குள்ள போலீசார், முகக்கவசங்களை கைப்பற்றி, தீயிட்டு கொளுத்தினார்கள். புகாரின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.