“பிரதமர் மோடி தினமும் இந்து-முஸ்லீம் விளையாட்டை விளையாடுகிறார்”-மம்தா பானர்ஜி..!

பிரதமர் மோடிதான் ஓட்டிற்காக தினமும் ‘இந்து-முஸ்லீம்’ விளையாட்டை விளையாடுகிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டல்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு(TMC) அதிகளவில் வாக்களிக்குமாறு முஸ்லீம் சமூகத்தை வலியுறுத்தியதாகக் கூறப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம்  புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் பெற்ற மம்தா இதுகுறித்து கூறுகையில், “எனக்கு எதிராக 10 நோட்டீஸ் வழங்கப்பட்டாலும் அது முக்கியமல்ல. நான் மத பாகுப்பாடின்றி அனைவரையும் ஒன்றாகவே வாக்களிக்கச் சொல்கிறேன், அதில் எந்தப் பிரிவும் இருக்காது.ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மக்களை மத அடிப்படையில் பிரித்துவிட்டு வாக்கு பெறுவதற்காக மட்டும் இந்து மற்றும் முஸ்லீம் பற்றி ஒவ்வொரு நாளும் பேசுகிறார், ஏன் தேர்தல் ஆணையம் பிரதமர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?”,என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் நடந்த வாக்கு சேகரிப்பில் வாக்காளர்கள் தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது மம்தா இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால்தான் இந்திய தேர்தல் ஆணையம்  வழிநடத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்கு எதிரான தனது அறிக்கைகள் தொடர்பாக ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் மம்தா தனது நிலைப்பாட்டை விளக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.