வாக்குபதிவின் போது தாமரை முத்திரை.. வானதி ஸ்ரீனிவாசன் மீது திமுகவினர் புகார்!
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன், வாக்குபதிவின் போது பாஜகவின் சின்னமான தாமரை முத்திரையை அணிந்திருந்ததால் திமுக சார்பில் புகாரளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளன்று கட்சி சார்ந்த சின்னம், முத்திரை என எந்தவித அடையாளத்தையும் வாக்குச்சாவடிக்குள் அணியவோ, எடுத்து செல்லவோ கூடாது என தேர்தல் ஆணையம் கடந்த 2014 ஆம் ஆண்டு தெரிவித்தது.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் நேற்று வாக்களித்தபோது பாஜக கட்சியின் சின்னமான தாமரை முத்திரையை தனது புடவையில் குத்தி வந்திருந்தார். இது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என கோவை திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.