அட்சய திரிதி என்றால் என்ன? தங்கம் தவிற வேறு எந்த பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும்?
அட்சய திரிதியை தங்க நகைகள் வாங்குவதற்கு ஒரு நல்ல நாளாக அனைவராலும் நம்பப்படுகிறது. இன்றைய தினத்தில், அனைத்து நகை கடைகளிலும் கூட்டம் அலைமோதும். இந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாளாக கருதப்படும் அட்சய திருதியை நாளன்று பெரும்பாலானொர் செய்யும் முதல் காரியம் தங்க நகை வாங்குவது.
அட்சய திருதியை நாளுக்கு எதற்காக இவ்வளவு மதிப்பு? உண்மையாகவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருந்துகொண்டே இருக்கும்.. இதற்கான விடையை தெரிந்துகொள்வதற்கு முன்னால், அட்சய திருதியை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அக்ஷயா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘எப்போதும் குறையாதது’ என்று பொருள். ஆதலால், தங்கம் , வெள்ளி, வைரம், வீட்டு மனைகள் வாங்குவது போன்ற அனைத்து செல்வம் பெருகும் காரியங்களை அட்சய திருதியை நாளன்று செய்வர். அவ்வாறு செய்வதன் மூலம், சொத்து பெருகும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் மேலோங்கி இருக்கிறது. திருதியை என்பது பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப்பிறகு வரும் மூன்றாவது திதி. சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை அமாவாசை நாளிற்கு அடுத்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படுவதே அட்சய திருதியை.
திருமாலின் அவதாரமான பரசுராமர் பிறந்த தினமாகவும், புனிதமான கங்கை நதியை சொர்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்ட நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ஆடையை வளரச்செய்ததும் இந்நாளில்தான்.மேலும், பாண்டவர்கள் சிவனிடம் வேண்டி, அட்சய பாத்திரத்தை வரமாக பெற்றது இந்நாளில்தான். இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது.
ஆதலால், அந்நாளில் செல்வம் வாங்கினால், அது பெருகும் என்று நம்பப்படுகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டுமே பெருகும் என்று இல்லை. வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆடைகள் போன்றவைகளும் வாங்கலாம். குறிப்பாக, வெண்மை நிறமுள்ள பொருட்களை வாங்குதல் மிக சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அட்சய திருதியை சிறப்பாக நம்மால் இயன்ற அளவு தானம் செய்யலாம். அவ்வாறு செய்வது, சுற்றியுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாகவும் நன்மை தருவதாகவும் அமையும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.