சென்னையில் மகளிர் தங்கும் விடுதி நடத்திவந்த வயதான கணவன் – மனைவி, கட்டையால் அடித்துக் கொலை!
மகளிர் தங்கும் விடுதி சென்னையில் நடத்திவந்த வயதான கணவன் – மனைவி, கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டிவாக்கத்தில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பணிக்குச் செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி செயல்படுகிறது. இதன் உரிமையாளரான மாயாண்டி என்ற முதியவரும், அவரது மனைவி வள்ளிநாயகியும் அங்கு 3-ஆம் தளத்தில் வசித்தனர். இவர்களது மகள் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், மகன் ஸ்ரீஹரீஷ் மேடவாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
நேற்று வழக்கம்போல பணிக்குச் சென்று வந்த ஸ்ரீஹரீஷ், வீட்டில் தாயும், தந்தையும் பின்தலையில் அடிபட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். தகவலின்பேரில் வந்த துரைப்பாக்கம் போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
நெல்லை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட மாயாண்டி – வள்ளிநாயகி தம்பதி, ஏராளமான சொத்துக்களின் உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் கொல்லப்பட்டது, ஆதாயத்துக்காகவா, முன்விரோதமா என்ற கோணத்தில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் ஸ்ரீஹரீஷ் மற்றும் அந்த விடுதியில் வசிப்பவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசாரின் மோப்ப நாய் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது.
கட்டையால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக உறுதி செய்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் ரத்தம் உறைந்து கிடந்ததால், கொலை பிற்பகலிலேயே நடந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் காலி செய்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2016 -ஆம் ஆண்டு பள்ளிக்கரணையில் வயதான மூதாட்டியும், பேத்தியும் கழுத்தறுத்து கொல்லப்பட்டு நகைகள் கொள்ளை போன வழக்கில், இதுவரை கொலையாளிகள் பிடிபடவில்லை. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒரு இரட்டைகொலை அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.