இரவு நேரங்களில் செல்போனில் சார்ஜ் செய்ய முடியாது.! இரயில்வே புதிய அறிவிப்பு.!
இனி இரயில்களில் மொபைல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை இரவு நேரங்களில் சார்ஜ் செய்ய பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
இரயில்களில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மொபைல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றை சார்ஜ் செய்ய முடியாது என மத்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறையை இந்திய இரயில்வேயின் மூத்த அதிகாரிகள் நேற்று இந்தியாவின் முதன்மை செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா(P.T.I)-ல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மேற்கு இரயில்வேயின் CPRO தலைவர் சுமித் தாக்கூர் கூறுகையில், இது அனைத்து இரயில்வேக்குமான இரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலாகும். மார்ச் 16 முதல் இதை நாங்கள் மேற்கு இரயில்வேயில் செயல்படுத்தத் தொடங்கினோம். ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் வகையில் இரவு 11-காலை 5 மணி வரை சார்ஜ் பாயிண்ட்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அண்மையில் ‘பெங்களூரு-ஹசூர் சாஹிப் நாந்தேட் எக்ஸ்பிரஸுக்குள்’ ஏற்பட்ட தீ விபத்துக்களைக் கருத்தில் கொண்டு, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாக இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த முறை இனி இரவு நேரங்களில் இரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் மொபைல்போனில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா..? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் ஒரு பவர்பேங்க்-ஐ எடுத்துச் செல்லுங்கள்.