மோடி கூறுவது அபாண்டமான பொய் – மு.க. ஸ்டாலின் விமர்சனம்..!
சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, 1989-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தி.மு.கவினரால் அவமானப்படுத்தப்பட்டதாக மோடி கூறுவது அபாண்டமான பொய், உயரிய பதவியில் இருப்பதை மறந்து பிரதமர் மோடி பொய் பேசி இருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. 1989 மார்ச் 25-ல் கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்வதை தடுக்க திட்டமிட்டு அதிமுகவினர் நாடகம் நடத்தினர். அதிமுகவினர் நாடகத்தை சட்டப்பேரவையிலேயே அப்போதைய எம்.எல்.ஏ திருநாவுக்கரசர் அம்பலப்படுத்தினார். திருநாவுக்கரசர் பேச்சு சட்டப்பேரவைக் குறிப்பில் தற்போதும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் எந்த பொய் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
2014-2016-ல் ஜெயலலிதாவை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என மோடி பேசினார். யாரோ கூறுகிறார்கள் என்பதற்காக எதையாவது பிரதமர் பேசலாமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதிமுகவினரின் ஊழல் குறித்து புள்ளி விவரத்துடன் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். ரவுடிகளை கட்சியில் சேர்த்துள்ள நீங்கள் சட்ட ஒழுங்கை காப்பற்றுவோம் என்கிறீர்கள் 125 நாட்களாக விவசாயிகள் மழை பனியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளை அழைத்து பிரதமர் மோடி பேசினாரா..? மோடிக்கு லாலி பாடும் அடிமை ஆட்சிதான் அதிமுக ஆட்சி என கூறினார்.