நான் முதல்வராக நினைத்திருந்திருந்தால் கடந்த 2001ம் ஆண்டிலேயே குஜராத் மாநிலத்துக்கு முதல்வராக வந்திருப்பேன்!பிரவீன் தொகாடியா!
விஸ்வ இந்து அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, ராமர் கோயில் விவகாரத்தை நாங்கள் எழுப்பியதால், விஸ்வ இந்து பரிசத் அமைப்பையே தூக்கிஎறிந்துவிட்டார் பிரதமர் மோடி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர் பிரவீன் தொகாடியா. சமீபத்தில் நடந்த விஎச்பி சர்வதேச தலைவருக்கான தேர்தலில் தொகாடியாவின் ஆதரவாளர் ராகவ் ரெட்டியை இமாச்சலப் பிரதேச முன்னாள் ஆளுநர் கோக்ஜே தோற்கடித்தார் . இதனால், அதிருப்தி அடைந்த பிரவீன் தொகாடியா விஎச்பி அமைப்பில் இருந்து வெளியேறினார்.
ஏற்கெனவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், விஎச்பிக்கும் இடையே கடுமையான உரசல் இருந்த நிலையில், இப்போது அதை தொகாடியா வார்த்தைகளால் பிரதமர் மோடியை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் இயற்ற வேண்டும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஹமதாபாத் நகரில் விஎச்பி தலைமை அலுவலகம் முன் இன்று பிரவீன் தொகாடியா காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.
இவருடன் சேர்ந்து விஎச்பி மாநில தலைவர் கவுசிக்மேத்தா, பொதுச்செயலாளர் ரச்சூர்ட் பரத்வா, இவரின் ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரவீன் தொகாடியா இன்று நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய 50 ஆண்டுகளாக வாழ்க்கையை நான் இந்துக்களின் நலனுக்காகச் செலவு செய்துள்ளேன். ஆனால், நான் இப்போது பிரதமர் மோடியால் தூக்கி எறியப்பட்டு இருக்கிறேன். நான் என்ன பதவி கேட்டானா, எந்தப் பதவியும் கேட்கவில்லையே. நான் அவரிடம் இருக்கும் பிரதமர் பதவியைக் கேட்கவில்லை. ஒரு தேநீர் பையும், பக்கோடா வறுப்பதற்கு பாத்திரத்தையும் கேட்கவில்லை. நான் பிரதமர் மோடியிடம் கேட்டது ராமர் கோயில் மட்டும்தான். ராமர் கோயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
மற்றவகையில் எனக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே எந்தவிதமான முன்விரோதமும், பகையும் இல்லை. தனிப்பட்ட பகையும் கிடையாது. ராமர் கோயில் கட்டுவதற்குச் சட்டம் இயற்றுவது குறித்து ஏன் மவுனம் காக்கிறார் என்பது குறித்துத்தான் அவர் மீது அதிருப்தியாக இருக்கிறேன். நான் முதல்வராக நினைத்திருந்திருந்தால் கடந்த 2001ம் ஆண்டிலேயே குஜராத் மாநிலத்துக்கு முதல்வராக வந்திருப்பேன். பிரதமர் மோடியுடன் எனக்குப் பகையும், விரோதமும் இருந்திருந்தால், அவரை முதல்வர் பதவி வகிக்க நான் அனுமதித்து இருக்கமுடியுமா.
நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். நான் கேட்கிறேன் கடந்த 1982ம் ஆண்டு இயக்கம் தொடங்கும்போது, நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்ததா. சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை அத்வானி ரதயாத்திரை சென்றது பிரதமர் மோடிக்கு நினைவு இருக்கிறதா. கடந்த1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்படும் போது, ஏதேனும் நீதிமன்ற உத்தரவு இருந்ததா.
ராமர் கோயில் கட்டுவது மட்டும் எங்கள் கோரிக்கை இல்லை, பசுக்கொலையை தடுக்கத் தனிச்சட்டம், காஷ்மீரில் பண்டிட்களை மறுகுடியமர்த்த வேண்டும். இந்துவாக இருக்கும் ஒருவர் முதல்முறையாகப் பிரதமராக வந்தநிலையில், பசுக்காவலர்களை எல்லாம் பசுக்குண்டர்கள் என்று கூறியுள்ளார்.இவ்வாறு பிரதவீன் தொகாடியா பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.