பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் – மாரி செல்வராஜ்..!!

Default Image

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் விதமாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர் படத்தின் படக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பியது.

இதனை தொடர்ந்து தற்போது பண்டாரத்தி புராணம் பாடலின் பெயரை மஞ்சனத்திப் புராணம் பாடல் என்று மாற்றியுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பது ” அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன்.

ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன. பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்… காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்
—-
மாரிசெல்வராஜ்
(குறிப்பு: படத்தில் மாற்றம் செய்யபட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யபட்டுவிட்டது. YouTube விதியின் படி ஓரிரு நாளில் தானாக மாறிவிடும்.)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்