வேலுமணியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் – திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார்.!
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி வேட்பு மனுவை நிராகரிக்க கோரி திமுக வேட்பாளர் புகார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 16ம் தேதி கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜெ.செந்தில் அரசனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று முன்தினம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.பி.வேலுமணிக்கு ரூ.3 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளது நம்பும்படியாக இல்லை என குற்றசாட்டினார்.
இந்த நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி வேட்பு மனுவை நிராகரிக்க கோரி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். அதிமாக சேர்த்த சொத்துக்களை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மனுவில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.