தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்
அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை, என்னுடைய பணத்தில் தான் சென்றேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.தங்கவேலு வேட்பாளராக போட்டியிடுவதால் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் சென்று தங்கவேலு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், குறுகிய காலத்தில் மக்களை விரைவாக சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதால் தான், நான் ஹெலிகாப்டரில் சென்றேன் என தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் என்பது எனக்கு தேவையில்லை, நான் பேருந்தில் பயணம் சென்றவன் தான். என்னை ஹெலிகாப்டரில் போக வைத்ததே இந்த மக்கள் தான். அரசு பணத்தில் நான் போகவில்லை, என்னுடைய பணத்தில் தான் சென்றேன். இந்த நேரத்தில் இப்படி எல்லாம் வரும் என்பதற்காகவே, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் செய்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை பல இடங்களில் தடங்கல் செய்ய ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுடைய கூட்டங்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்காது. இருப்பினும் இந்த குறுகிய காலத்தில் விரைவாக செல்லத்தான் தான் ஹெலிகாப்டரை பயன்படுத்தினேன் என விளக்கமளித்துள்ளார்.
மேலும், 234 பேரில் நான் மக்களுக்கு தெரிந்த முகம் என்பதால் தான், இவர்களுக்கு ஆதரவாக அனைத்து இடங்களுக்கும் செல்கிறேன் என கூறியுள்ளார். இதனிடையே, திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வைக்க நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.