இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.!!
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி வியாழன் கிழமை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். நீண்ட நேரம் கடந்தும் எஸ்.பி.ஜனநாதன் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பதால் அவரின் உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது எஸ்.பி.ஜனநாதன் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 14) காலை எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீரென்று மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி காலை 10 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 61.