மகப்பேறு உதவித்தொகை ரூ.24,000., பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை முக ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தலுக்கான 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பில் பல்வேறு கவர்ச்சிகரமாக திட்டங்கள் அடங்கியுள்ளன. அதில், மகளிர் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்றும் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார். கூட்டுறவு நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.