தேர்தல் எதிரொலி: கேரளாவில் 10, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு!
கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10 மற்றும் +2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள் ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 10 மற்றும் +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, வரும் 17 முதல் 30 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்பொழுது கேரளாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று அரசிற்கு அம்மாநில ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது.
இதுதொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தேர்தல் ஆணையம், 10 மற்றும் +2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க அனுமதி அளித்துள்ளது.