பாஜகவிற்கு கொடுத்தால்..,கட்சியை விட்டு விலகுவோம்..அதிமுகவினர் தர்ணா..!
கோவை தெற்கு தொகுதி வேண்டும். பாஜகவுக்கு விட்டுத்தர முடியாது என முழக்கங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தொகுதி பங்கீட்டில் வரும் பிரச்சனையை விட எந்தந்த தொகுதியில் போட்டிடவுள்ளனர் என்பதில் தான் கூட்டணிகளுக்குள் பிரச்சனை ஏற்படும். அந்த வகையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜக அதிமுகவிடம் கேட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்ககூடாது எனவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு ஒதுக்க கோரிக்கை கோவை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டும் வேண்டும் கோவை தெற்கு தொகுதி வேண்டும். பாஜகவுக்கு விட்டுத்தர முடியாது என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தொண்டர் சட்டையை கழற்றி தரையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்தினார். கோவை தெற்கு தொகுதியை பாஜவிற்கு கொடுத்தால், தேர்தலுக்கு வேலை செய்ய மாட்டோம். கட்சியை விட்டு விலகுவோம் என தெரிவித்தனர்.