#BREAKING: குமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி-பாஜக அறிவிப்பு ..!
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை தோல்வியை தழுவியுள்ளார். 8-வது முறையாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதா கிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுவை சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு முன் மறைந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.