#BREAKING: ரங்கசாமி பாஜக கூட்டணியில் தான் உள்ளார்..சாமிநாதன்..!
என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தங்கள் கூட்டணியில்தான் இருப்பதாக பாஜக உறுதியாக தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார்.
என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் தொடர்ந்து ரங்கசாமியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை ரங்கசாமி தனது முடிவு என்ன என்பதை வெளியில் சொல்லவில்லை, பிரதான எதிர்க்கட்சி என்பதால் ரங்கசாமி என்ன செய்ய போகிறார் என்பது புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், தோல்வி பயத்தால் மக்களை குழப்பும் வேலையில் புதுச்சேரி திமுக -காங்கிரஸ் கூட்டணி ஈடுபடுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என தெரிவித்தார். மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பார்; என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தங்கள் கூட்டணியில்தான் இருப்பதாக உறுதியாக தெரிவித்தார்.
ஆனால் புதுச்சேரியில் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.