6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட ஃபேம் திட்டம்..! எதற்காக.?
இந்தியாவில் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் எரிபொருளுக்கான செலவும் அதிகமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு குறைவது மட்டுமல்லாமல், வாகனங்களால் ஏற்படும் சுற்றுசூழல் மாசும் குறையும் என மத்திய அரசு நம்புகிறது.
இதன் காரணமாக மத்திய அரசே அதன் பயன்பாட்டிற்கு எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு எடுத்தது. மக்களை அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க கனரக தொழிற்சாலைத்துறை சார்பில் தேசிய ஆட்டோமோட்டிவ் என்ற வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியம் சார்பில் ஃபேம் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 2015ம் நிதியாண்டில் அமல் படுத்தப்பட்டது.
ஃபேம் திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக், ஸ்கூட்டர்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் பஸ்களுக்காகவும், 20 சதவீதம் மூன்று சக்கர வாகனங்களுக்காகவும், 10-15% சதவீதம் நான்கு சக்கர வாகனங்களுக்காவும், 10 சதவீதம் சார்ஜ் ஏற்றும் மையங்களை வைப்பதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.
2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டது. 2017ல் முடிவடைந்த இந்த திட்டம் மேலும் 2 முறை தலா ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டு 2018 மார்ச் வரை திட்டமிட்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்றுள்ளனர்.
இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யவும், அதிக எண்ணிக்கையிலான சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்கவும் முடியும் என எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் ஹைபிரிட், பிளக் இன் ஹைபிரிட், சாதாரண எலெக்ட்ரிக் கார் ஆகியவை உள்ளடங்கும். மேலும் ஃபேம் 2 என்ற திட்டத்தை மத்திய அரசு வெளியிடும் என ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை இந்தியாவில் 1,98,977 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தினமும் 45,490 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வாகனங்கள் இயங்குவதால் காற்றில் கலக்கும் மாசு நாள் ஒன்றிற்கு 1,13,364 கிலோ குறைக்கப்பட்டுள்ளது.