ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் சாமியார் அசிமானந்த் உள்ளிட்ட அனைவரும் விடுதலை!
என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால்,ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்தா உள்ளிட்ட 5 பேர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சாமியார் அசீமானந்தா, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ்.சின் முன்னாள் பிரச்சாரகர்கள் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ஆர்எஸ்எஸ் தொண்டர் ராமச்சந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதில் சுனில் ஜோஷி வழக்கு விசாரணையில் இருந்தபோதே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டார். சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் ஆகியோர் தொடர்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, எஞ்சிய 5 பேரின் தொடர்பு குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தின் நம்பள்ளியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.