கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் முற்றிலும் இலவசம்.. நிதிஷ் குமார் அறிவிப்பு..!
கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கூட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி வருகிறது. இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசிகளின் விலையை மத்திய அரசு ஒரு டோஸுக்கு 250 ரூபாயாக நிர்ணயித்தது. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முழு செலவையும் மாநிலத்தின் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் கூட ஏற்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. ஏனென்றால் பீகாரில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு, ஆட்சிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாரதீய ஜனதா கட்சி உறுதியளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், தனியார் மருத்துவமனைகளில் கூட மக்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு தடுப்பூசியின் முதல் அளவு சற்று நேரத்திற்கு முன் மருத்துவமனையில் போடப்பட்டது.