ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதி…!
ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி சதீஷ்குமார்.
ஆர்.எஸ்.பாரதி திமுக-வின் அமைப்பு செயலாளராக உள்ளார். இவர் பட்டியல் இன மக்களை அவமதித்ததாக கூறி வன்கொடுமை சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்ததை அடுத்து, ஆர்.எஸ்.பாரதி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்ட போது, அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், பட்டியல் இன மக்களை புண்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால் புகார்தாரர் தரப்பில் வாதிடும்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு, மக்களை பிளவுபடுத்தும் வண்ணமாகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, நீதிபதி சதீஷ்குமார் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து உள்ளார். மேலும், ஆர்.எஸ்.பாரதி வழக்கை ரத்து செய்யுமாறு அளித்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, நீதிபதி சதீஷ்குமார் கூறுகையில், வழக்கு விசாரணையை தாமதமின்றி முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அறிவுபூர்வமான விவாதம் நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் எதிர் தரப்பினர் மீது விஷத்தை கக்குவது பழக்கம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளார்.