ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது – டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு!
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவே அதை அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு டெல்லி ஹைகோர்ட்டில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேலும் நான்கு பேர் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் விரைவில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் நேற்று பிற்பகல் விரிவான பதில் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயானது என்றாலும் அதை தனிநபர் சுதந்திரம் என்று வரையறுக்க முடியாது எனவும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உடல்ரீதியாக குடும்பமாக சேர்ந்து வாழ்ந்தாலும் யார் கணவர் யார் மனைவி என்பதை பிரித்தறிய முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பதால், முன்பிருந்த சட்டங்களை மீறுவதாக அமைந்து விடுவதுடன், இந்த சட்டங்கள் அனைத்தும் பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டு தான் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர் மற்றும் ஒவ்வொரு மதங்களின் அடிப்படையிலும் வகுக்கப்பட்டுள்ள இந்த திருமண பந்தத்தை ஒரே பாலினத்தவர் செய்து கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும், அப்படி ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதில் நாட்டில் மிகப் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.