தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…!
திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை இன்று அளிக்க உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து, அணைத்து காட்சிகளிலும் விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக சார்பில், 2021-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்,திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 24-ம் தேதியுடன் விருப்பமனுக்களை பெறும் நடைமுறை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சியினர் மத்தியில் காணப்படும் ஆர்வத்தின் காரணமாக, விருப்பமனுக்களை பெறும் நடைமுறையை 28 வரை நீட்டித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக பிரபலங்கள் பலரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை இன்று அளிக்க உள்ளார்.