#BREAKING: டூல்கிட் வழக்கு..திஷா ரவிக்கு ஒருநாள் போலீஸ் காவல்..!
மாணவி திஷா ரவியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டும் வகையில் ‘டூல்கிட்’டை தயாரித்ததாக போலீசார் புகார் தெரிவித்தனர்.
திஷா ரவி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் ‘டூல்கிட்’டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி போலீசார் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கைது செய்தனர். கைது செய்த திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அந்த காலக்கெடு கடந்த 20-ம் தேதி முடிந்த நிலையில் மீண்டும் திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், மூன்று நாள் காவல் முடிந்ததும் திஷா ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது போலீசார் மேலும் 5 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கோரினர். ஆனால், மாணவி திஷா ரவியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில் திஷா ரவி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீது நாளை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.