பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு!

Default Image

பதஞ்சலியின் கொரோனில் எனும் ஆயுர்வேத மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிபர் பாபா ராம் தேவ் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார மையத்தின் மருத்துவ கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கண்டறியப்பட்ட மருந்துகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபலமான பாரம்பரிய மருத்துவ நிறுவனமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ள பதஞ்சலி எனும் நிறுவனத்தின் சார்பில் கொரோனில் எனும் மருந்து கடந்த வருடம் ஜூன் மாதம் அந்நிறுவனத்தின் அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து இது கொரோனா மருந்துகளுடன் சேர்த்து கொடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கும் ஏற்றது என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மருந்து சற்றே மேம்படுத்தப்பட்டு கொரோனில் கிட் எனும் பெயருடன் டெல்லியில் உள்ள பதஞ்சலி நிறுவனத்தால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் அந்நிறுவனத்தின் அதிபர், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மூன்று முதல் ஏழு நாட்களில் 100% குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என பதஞ்சலி நிறுவனத்தின் அதிபர் பாபா ராம்தேவ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மத்திய மருந்து கட்டுப்பாட்டு பிரிவு, தங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இது மருந்து பொருள் என்ற உறுதி மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், கொரோனாவை குணமாக்கும் என்பது தொடர்பாக தாங்கள் இந்த கொரோனில் மருந்துக்கு எந்த ஒரு சான்றிதழும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனில் மருந்தை தனியாக உட்கொண்டு வருவதால் கொரோனா முழுமையாக  குணமடையும் என்பதற்கான சான்றிதழையோ, ஒப்புதலையும் உலக சுகாதார மையம் அளிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்