டூல்கிட் வழக்கு..திஷா ரவி ஜாமீன் வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.!

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 26 அன்று விவசாயிகள் டெல்லியில் ஒரு டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.

செங்கோட்டைக்கு சென்ற விவசாயிகள் செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்த ஸ்வீடன் நாட்டின் சுற்று சூழல ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், டூல் கிட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ஜனவரி 26 போராட்டங்கள் பற்றிய விவரங்கள் இருந்ததாகவும், டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர்  அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த டூல் கிட்டை பதிவேற்றியவர்களை கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது சுற்று சூழல் ஆர்வலர் டூல் கிட்டில் சில மாற்றங்களை செய்து பின்னர் அதை அவர் மற்றவர்களுக்கு அனுப்பினார் என காவல் துறை கூறியது.

இதனால், திஷா ரவி ‘டூல்கிட்’டை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும், இவர் உருவாக்கிய ‘டூல்கிட்’டைதான் கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்துள்ளார். திஷா ரவி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் ‘டூல்கிட்’டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்த திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. அந்த காலக்கெடு முடிந்த நிலையில் இன்று மீண்டும் திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

திஷா ரவி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க போலீஸார் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, திஷா ரவியின் ஜாமீன் மனு மீது வரும் 23-ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. தற்போது நீதிமன்றக் காவலில் திஷா ரவி இருந்து வருகிறார்.

 

author avatar
murugan