காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன் – கேஎஸ் அழகிரி
ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையை அகற்றி புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்ட ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும் என்பதால் பெண் காவல்துறையினர் மற்றும் காவலர்கள் இணைந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், மகாத்மா காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணியை கைது செய்யும் போது அடக்குமுறையை கையாண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும்போது தமிழகத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு விரோதமான அடக்குமுறையை ஏவிவிடுகிற காட்சியாகவே தமிழக ஆட்சியாளர்களை கருதவேண்டிருக்கிறது. எனவே ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி சிலையை தரமானமுறையில் அமைக்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் எஸ். ஜோதிமணியை கைதுசெய்யும் போது அடக்குமுறையை கையாண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன்.@KS_Alagiri pic.twitter.com/otEx1stUNq
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 20, 2021