போராடும் விவசாயிகளுடன் இப்போதும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – மத்திய வேளாண் அமைச்சர்!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தற்பொழுதும் தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்டமாக மத்திய அரசு விவசாயிகள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில் இன்னும் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசும்பொழுது புதிய மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரிவு வாரியாக விவாதிக்க தயார் என அவர் தெரிவித்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்கிறோம். அவர்களுடன் அரசு ஒவ்வொரு பிரிவாக விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.