#INDvENG : இங்கிலாந்து அணி அபார வெற்றி ! 1-0 என்ற கணக்கில் முன்னிலை!
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ஆம் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக ரோகித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினார்கள். ஆனால் இருவரும் நிலைத்து நிற்கவில்லை .சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார்கள். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரகானே 1 ரன், கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்கள்.
இந்திய அணி சரிவில் இருந்த சமயத்தில், புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.புஜாரா ஒரு புறம் பொறுமையாக விளையாட மறுபுறம் பண்ட் அதிரடியாக விளையாடினார்.ஆனால் ஒரு கட்டத்தில் புஜாரா 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவர் ஆட்டமிழந்து சென்ற சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிய பண்ட் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். 88 பந்துகளில் 9 பவுண்டரிகள் ,5 சிக்சர்கள் அடித்தார் பண்ட் .இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது.
இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையில் இருந்தது. களத்தில் வாஷிங்டன் சுந்தர் 85* ரன்களுடன் இருந்தார்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பெஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது.ஆகவே இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இந்திய அணியின் பந்துவீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
420 ரன்களை இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித், சுப்மான் கில் இருவரும் இறங்கினார்கள்.வந்த வேகத்தில் ரோகித் 12 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.5-ஆம் நாள் ஆட்ட நாளான இன்று இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் புஜாரா 15 ரன்கள்,கில் 50 ரன்கள்,ரகானே ரன் எதுவும் எடுக்கவில்லை,பண்ட் 11 ரன்கள்,சுந்தர் ரன் எதுவும் எடுக்கவில்லை, அஸ்வின் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மட்டும் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒரு புறம் போராடினார்.அவரும் 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.பும்ரா 4 ரன்களிலும் ,நதீம் ரன் எதுவும் எடுக்கவில்லை.
இறுதியாக இந்திய அணி 58.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே அடித்தது.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் 4 விக்கெட்டுகள்,ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.