சசிகலா வருகை: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன்
சசிகலா வருகை அரசியல் களத்தில் வ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பாகவே சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விடுதலைக்கான ஆவணங்களை வழங்கினர்.
11 நாட்கள் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, சசிகலா ஒருவாரம் ஓய்வுக்காக பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு தனது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு பயணம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக உருவெடுத்தது. பின்னர் அதிமுக கொடியை பயன்படுத்தியதால், அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.
ஓய்வுக்கு பிறகு இன்று காலை பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார். அப்போது தமிழக எல்லையான ஓசூர் அருகே தனது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்படாததாக கூறப்படுகிறது. பின்னர் வேறு காருக்கு மாறிய சசிகலா, அந்த காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்தடைந்தார். சசிகலாவை வழியெங்கும் ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், சசிகலா வருகை தமிழக அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவுள்ளதால் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று தமிழகம் வரும் சசிகலா அடுத்தடுத்து அரசியல் களத்தில் என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.