காவல் துறைக்கு இது தான் வேலையா ? – சசிகலா வழக்கறிஞர்
முதலில் நோட்டீஸ் தரட்டும்,அந்த நோட்டீஸில் என்னவெல்லாம் இருக்கோ ,அதை சட்டப்படி எதிர்கொள்கிறோம் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை கிளம்பினார்.அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது.சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
பின் தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்த அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில், வேறு ஒரு காருக்கு மாறினார் சசிகலா. ஆனால், அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், கட்சியில் இருக்கக்கூடிய ஒரு கொடி பிரச்சினைக்கு நீதிமன்றத்திற்கு செல்வார்களா ? இல்லை காவல் நிலையத்திற்கு செல்வார்களா என்று கேள்வி எழுப்பினார்.தமிழக காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு செய்வதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.ஒரு வழக்கறிஞருக்கும், காவல் துறையினருக்கும் இல்ல சம்மந்தப்பட்டவர்களுக்கோ பேசுவதற்கான விஷயம் தான் இது .காவல் துறைக்கு இது தான் வேலையா ? எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது ,இதே ஒரு கட்சியை யாராவது கொடி பிரச்சினையை முன்னெடுத்து காவல் துறையை கொண்டு அடக்கிவிட முடியுமா ? இதை பொறுத்தவரைக்கும் முதலில் நோட்டீஸ் தரட்டும்,அந்த நோட்டீஸில் என்னவெல்லாம் இருக்கோ ,அதை சட்டப்படி எதிர்கொள்கிறோம்.சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்,அவர் கொடி கட்டி போவதை சட்டரீதியாக யாரும் தடுக்க முடியாது.சட்டப்படி யாருமே தடுக்க முடியாது.அந்த வழக்கை பற்றி எந்த அமைச்சரும் வாய் திறக்கவே மாட்டார்கள்.யாருமே வாய் திறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.