வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகிறார்கள் -தினகரன் பேட்டி
ஆட்சி அதிகாரம் வைத்துள்ள அமைச்சர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 4-ஆம் தேதி சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதன் பின் நேற்றும் திரிபாதி அலுவகத்திற்கு சென்ற, அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீது மீண்டும் புகார் அளித்தனர்.நேற்று சசிகலா பெங்களூரில் இருந்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து இரண்டு முறை புகார் அளித்தனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சசிகலா அவர்கள் 4 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்.தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் வரவேற்க காத்திருக்கிறார்கள்.சசிகலாவை வரவேற்பதை தவிர வேறு எண்ணம் எங்களுக்கு கிடையாது.ஆனால் ஏன் பயப்படுகிறார்கள் இவர்கள் ,ஆட்சி அதிகாரம் கையில் உள்ளது. ஆட்சி அதிகாரம் வைத்துள்ள அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு இரண்டு நாட்ளாக கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் ஓடுகிறார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.இதெல்லாம் பார்க்கும்போது ,இவ்வளது தரம் தாழ்ந்து போய் இருக்கிறார்கள் என்ற வருத்தம் தான் உள்ளது.சதி திட்டம் தீட்டுகிறார்களோ என்ற ஐயப்பாடு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.