இன்று ‘சக்கா ஜாம்’ போராட்டத்தை நடத்தவுள்ள விவசாயிகள்…!

டெல்லியில் விவசாயிகள், இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தை நடத்த உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தை நடத்த உள்ளனர்.’சக்கா ஜாம்’ என்பது மற்ற வாகனங்களை ஓட விடாமல் செய்யும் சாலைமறியல் போராட்டம் ஆகும். டெல்லியில் உள்ள விவசாயிகள், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரவேண்டுமென  அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், டெல்லி காவல்துறை, பாதுகாப்பு மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி உள்ளார்.