அதிமுக அரசின் கையாலாகாத்தனமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம் -சீமான்
பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது, முடிவெடுக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டு இறுதிநாள் முடியும்வரை கள்ளமௌனம் சாதித்துவிட்டுத் தற்போது எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்று தமிழக ஆளுநர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவைத் துளியும் மதித்திடாது மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
பாஜக அரசின் நயவஞ்சகமும், அதிமுக அரசின் கையாலாகாதத்தனமுமே கைகளுக்கு வந்த விடுதலையைத் தட்டிப் பறித்திருக்கிறது. அதற்கான தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் கட்டாயம் புகட்டுவோம் எனச் சூளுரைக்கிறேன்.ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் 161வது சட்டப்பிரிவின் கீழ் எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.