தீப் சித்து குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு – டெல்லி போலீசார்
டெல்லி போலீசார் , தீப் சித்து பற்றிய தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசும், மற்ற நான்கு பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ 50,000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிற நிலையில், இதற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
இதில் தீப் சித்து என்பவரும் ஜக் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகிய நான்கு பெரும், செங்கோட்டைக்குள் புகுந்து தேசியக் கொடியை இறக்கி சீக்கிய கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. இவர் பாஜக-வின் ஆதரவாளர் என்றும், மோடியுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வன்முறை குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணம் தீப் சித்து என்றும், இவர் பாஜகவுக்கு நெருக்கமான நபர், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தை ஒடுக்க ஆளும் கட்சியின் செயல்தான் இது என்றும், விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், டெல்லி போலீசார் , தீப் சித்து பற்றிய தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசும், மற்ற நான்கு பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ 50,000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.