பேட்டரி டார்ச் லைட் சின்னம் – வழக்கை வாபஸ் பெற்றது மக்கள் நீதி மய்யம்.!

பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளரான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த சின்னத்தை முன்னிலைப்படுத்தியே எங்களது கட்சியும் மக்களை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் இந்த சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, எம்ஜிஆர் மக்கள் கட்சி டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதால், மக்கள் நீதி மய்யதுக்கு மீண்டும் தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எங்களது சின்னம் கிடைத்ததால் மனுவை வாபஸ் பெறுவதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்