அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் – கேபி முனுசாமி
அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். பொதுச்செயலாளர் பதவி புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் வாயிலாக அர்ப்பணிக்கப்பட்ட பதவி. அம்மா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பதவியை மீண்டும் நாங்கள் பயன்படுத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. மற்றவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர்.
அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சி கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்து பார்த்தார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார். அதிமுகவிற்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் தொண்டனாக சேர்க்க பரிசீலினை செய்யப்படும். அது கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.