அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது? – கமல்ஹாசன் ட்வீட்
மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? என்று கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 2000 அம்மா மினி க்ளினிக் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அப்பகுதியில் இருந்த சமுதாயக் கூடத்தை தற்காலிகமாக அம்மா கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து, நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அம்மா கிளினிக் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே, கட்டடத்தின் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. அருகில் நின்றிருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கரூரில், திறப்பு விழாவின் போதே இடிந்து விழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது? என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?
— Kamal Haasan (@ikamalhaasan) January 31, 2021