தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகம் முழுவதிலும் இன்று 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளம்பிள்ளை வாதம் நோய் வராமல் தடுப்பதற்காக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் கொடுக்கக்கூடிய போலியோ சொட்டு மருந்து வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையம், பள்ளி மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்கள் விமான நிலையங்களிலும் கூட சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் 5 மணி வரையிலும் சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் அனைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் தகுந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் ஆகியவற்றை கட்டாயமாக்கி கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருக்கும் பெரியவர்கள் தயவுசெய்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க கூடிய இடங்களுக்கு வரவேண்டாம் எனவும் குழந்தைகளை அழைத்து வரக் கூடிய பெற்றோர்கள் உரிய பாதுகாப்பு முறையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்த படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய சிறப்பான இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தான் தமிழகத்தில் போலியோ இல்லாத நிலை உருவாக்கியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.