ராமதாஸ் திமுகவை விமர்சிக்க விமர்சிக்க, பாமகவினர் திமுகவை நோக்கி வர போகிறார்கள் – முக ஸ்டாலின்

Default Image

திமுக வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்கிறார் ராமதாஸ் என்று முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலக வளாகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 1,110 பேர் திமுகவில் இணையும் விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், முதலில் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அவர், வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20% இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலில் டி.ஜி.பி.யாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க தான்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சியும் தி.மு.க தான். ஆனால், பாமக நிறுவுனர் ராமதாஸ் அவர்கள் சொந்த ஆதாயத்திற்காக, சுய நலத்திற்காகவும் வன்னியர் சமுதாயத்திற்கு கலைஞர் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்கிறார். ராமதாஸ் திமுகவை விமர்சிக்க விமர்சிக்க, பாமகவினர் திமுகவை நோக்கி வர போகிறார்கள்.  அதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஊழல் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. படித்து விட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகிறார்கள். சிறு, குறு தொழில்கள் எல்லாம் நலிவடைந்து விட்டன. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறியாமல் நினைவிடத்தைத் திறந்து வைக்க என்ன யோக்கியதை இருக்கிறது?  என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் பழனிசாமி உளறுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்