அமெரிக்க நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூட்டணி..!!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் ஸ்லாட் உடன் கூடிய ஒரு லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஜியோ 4ஜி லேப்டாப் பணிக்காக தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பிரபல அமெரிக்க சிப்மேக்கர் நிறுவனமான க்வால்காம் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாம்.
இதன் விளைவாக இன்-பில்ட் 4ஜி கனெக்ஷன் கொண்ட விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ லேப்டாப்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த க்வால்காம் லேப்டாப்கள் வெளிப்படையாக ஜியோ 4ஜி இணைப்புகளுடன் தொகுக்கப்படும் என்பதும், க்வால்காம் நிறுவனம் ஏற்கனவே ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் உடன் 4ஜி பீச்சர் போன்களை உருவாகும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் வழியாக நெக்ஸ்ட் ஜெனரேஷன் “ஆல்வேஸ் கனெக்டெட் பிசிக்கள்” உருவாக்கும் திட்டமுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிப் தயாரிப்பாளர் ஆன க்வால்காம், அதன் ஸ்னாப்டிராகன் 835 கொண்டு இயங்கும் லேப்டாப்களை கொண்டு வர இன்டர்நெட் ஆப் திங்ஸ் பிராண்ட் ஆன ஸ்மார்ட்ரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
க்வால்காம் நிறுவனமானது, ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் கொண்டு இயங்கும் பல லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் க்வால்காம் நிறுவனத்தின் மூலம் சக்தியூட்டப்படும் லேப்டாப்கள் உலகளாவிய சந்தைகளை இன்னும் தாக்கவில்லை என்கிற நிலைப்பாட்டில், ஜியோ 4ஜி சிம் உடன் இணைக்கப்பட்ட லேப்டாப் எப்படி உருவாகும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.