இஸ்லாமிய தொப்பி அணிந்து ஜமாத் நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடல்.!
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஜமாத் நிர்வாகிகளுடன் உரையாடி உள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, தலையில் இஸ்லாமிய தொப்பி அணிந்து கொண்டு ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது பேசிய முதல்வர், என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. மதம், சாதி என்ற பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும். குடும்பத்தில் ஒருவனாக இருந்து சேவையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் படிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.